×

சிறைக்கு சென்றதால் வயல்காட்டில் 4 குடும்பத்துக்கு 6 ஆண்டு வனவாசம்: 6 லட்சம் கட்டும்படி ஊர் நாட்டாமை அடாவடி: போலீசில் கண்ணீருடன் புகார்

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே சிறைக்கு சென்று திரும்பியதால் 4 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ரூ.6 லட்சம் அபராதம் கட்டினால் மட்டுமே ஊரில் அனுமதி வழங்கப்படும் என கூறியதால், 6 ஆண்டுகளாக வனவாசம் அனுபவித்து வருவதாக போலீசில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன எட்டிபட்டு மலை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இதில் முத்து (50), பொன்னுசாமி (55) மற்றும் உறவினர்கள் என 4 குடும்பங்களும் உண்டு.

இந்நிலையில், கடந்த 2018ல் சின்னசாமி என்பவரை கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் முத்து, பொன்னுசாமி ஆகிய இருவரையும் வேப்பங்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றத்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் சிறைக்கு சென்று வந்ததால் சின்ன எட்டிபட்டு கிராமத்தின் ஊரான் (நாட்டாமை) பழனி என்பவர், முத்து, பொன்னுசாமி ஆகியோர் மற்றும் உறவினர்கள் என 4 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மலைக்கிராம மக்களின் வழக்கப்படி அவரது உத்தரவிற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், நடைமுறைப்படுத்துவது வழக்கம். இதனால் கடந்த 6 ஆண்டுகளாக இந்த 4 குடும்பத்தினரும் வயல்காட்டில் ஒதுங்கி பொதுமக்களுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் வனவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னுசாமியின் மகனுக்கு திருமணம் செய்ய முயன்றபோது ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரில் தங்களை சேர்த்து கொள்வதற்காக ஊரானிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு போய் கேட்டுள்ளனர். அப்போது உங்கள் 4 குடும்பங்களையும் ஊரில் சேர்த்துக்கொள்ள குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் வீதம் ரூ.6 லட்சம் கட்ட வேண்டும் என அவர் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு வேப்பங்குப்பம் போலீசில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.

அதில் ‘நீதிமன்றமே குற்றவாளி அல்ல என தீர்ப்பு கூறிவிட்டது. ஆனால், செய்யாத குற்றத்திற்காக எங்கள் 4 குடும்பத்தை கடந்த 6 ஆண்டுகளாக ஊரை விட்டு ஊரான் ஒதுக்கி வைத்துள்ளார். இதனால், கைக்குழந்தைகளுடன் வயக்காட்டில் கடும் சிரமப்பட்டு வருகிறோம். ரூ.6 லட்சம் கொடுத்தால் மட்டுமே ஊருக்குள் வர வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். விளை நிலங்கள் வழியாக நடந்து சென்றால் முள்வேலி போட்டு பாதையை அடைத்து விடுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்வது கூட சிரமமாக உள்ளது. எனவே, ஊரான் பழனியை கைது செய்து எங்களுக்கு ஒரு விடிவு காலத்தை காட்ட வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இங்குள்ள 84 கிராமங்களில் முதன்முறையாக இவர்கள் ஊரான் மீது போலீசில் புகார் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சிறைக்கு சென்றதால் வயல்காட்டில் 4 குடும்பத்துக்கு 6 ஆண்டு வனவாசம்: 6 லட்சம் கட்டும்படி ஊர் நாட்டாமை அடாவடி: போலீசில் கண்ணீருடன் புகார் appeared first on Dinakaran.

Tags : Wyalgat ,Adavadi ,Odugathur ,Wielgat ,Adaavadi ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...